பாரதி எனும் நல்லதோர் வீணை நல்லதோர் வீணை செய்தாய்- அதை பாரதியெனும் வடிவிலே படைத்தே நரம்பெல்லாம் வீரம் செறிந்த நற்பாக்களை வீணே ஆக்குவதுண்டோ நரர்களின் செவியில் செவ்வாயால் நாடெலாம் வீரமளித்துச் செல்கிறதே! நல்லோரின் வீட்டினுள் சென்றனவே நல்வீணை வீயாதெங்கும் நிலைத்தனவே நன்னெஞ்சே வீழாது செங்குருதியாய் நாளெல்லாம் வீரிய செய்யுளே நலங்கெட்ட வீ(வு)வோரிடம் செப்பலோசையாய்... நங்கைரால் வீற்று செழித்தனவே நற்கல்வியெனும் வீங்கும் செல்வமே... நற்செய்தியாவும் வீசியதோ செவ்வாயாலே! நடப்பவற்றை வீறு செதுக்கியதே நடத்தியன வீரையாய் செந்தமிழ்நாட்டிலே நன்னாளென வீதியிலே செல்லுமே நற்றமிழர் மீண்டும் உதிப்பாரென!!... நீ கேட்பன செறிந்ததே உம்மைச் சுடர்மிகுவறிவுடன் படைத்தற்கே வல்லமை பெற்றாயே -இந்த மாநிலம் பயனுற வாழ்ந்தாயே! விடை பெற்று சென்றாலும் விடை பெறாது நெஞ்சங்களில் விடாது பெறுந்தென்றலாய் வீசுமே.... °°°° அருஞ்சொற்பொருள்: வீறு - வீரியம் வீயாது - நீங்காது வீவோர் - கெட்டவர்கள் (வீவு - கேடு) வீங்கும் - பெருகும் நரர் - மனிதர் வீரை - வாழையடி வாழையாக பாரதி நடத்திய போராட்டங்கள் யாவும் இன்றும் எழுதிய செவ்வாய்- செம்மையான வாய் செங்குருதியாய் - செங்குருதி நிற்காமல் உடலில் ஓடிக்கொண்டே இருக்கும் அது போல பாரதி எழுதிய எழுத்துகள் செப்பலோசையாய் - எழுத்துகள் எதிர்வாதிகளுக்கு பதிலாய் அமையும் °°°° இலக்கணக் குறிப்பு: ந(ல்)லோரின்-ந(ல்)வீணை ந(ற்)கல்வி - ந(ற்)செய்தி ந(ட)ப்பவற்றை - ந(ட)த்தியன சென்றன(வே) - நிலைத்தன(வே) °°°° விளக்கம்:- நல்லதோர் வீணை செய்தாய்- அதை பாரதியெனும் வடிவிலே படைத்தாய் வீரமளிக்கும் பாட்டுகளை வீணாக்குவோமோ? உம் பாட்டுகளை கேட்டு நாடே வீரம் பெற்றதே! நீ நீங்காது நிலைத்தாயே நல்லோரை வீழ விடாது செங்குருதியளிக்கும் உம் மொழிகள் வெள்ளையர்களை வெகுண்டோட வைத்ததே நீயளித்த பாட்டுகள் விடைகளானதே... மங்கையர்கள் கற்று செழித்தனரே... செய்தி கேட்டாயோ மேலோகத்திலே (பெண்கள் யாவரும் கற்று பெரிய பதவிகள் வகித்து விண்ணிற்குச் சென்று சாதனைகள் புரிந்தனர். இவை யாவும் அறிந்தீரா?) போராட்டத்தில் பாட்டுகள் யாவும் வீரியமாக மாற்றி எழுவித்ததே... உம் செயல்கள் யாவும் வாழையடி வாழையாக தொடர்ந்ததே நம் நாட்டிலே மீண்டும் உதிக்கும் நன்னாள் காண பெருந்திரள் நாடெங்கும் நீ கேட்ட பாடலுக்கேற்றவாறே வல்லமை பெற்று திகழ்ந்தாயே மாநிலம் பயனுற வாழ்ந்தாயே விடை பெற்று சென்றாலும் விடை பெறாது நெஞ்சங்களில் என்றென்றும் நிறைந்து இருப்பாய்... |